மும்பையைச் சேர்ந்த 46 வயதான சுஷில் சர்மா என்ற நபர், மலாடில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல மதியம் ஒரு மணியளவில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்குக் கிளம்பியுள்ளார். கோரேகான் கிழக்கில் உள்ள வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் ஆரே மேம்பாலத்தில் அவர் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மதியம் 1.30 மணியளவில் மலாட் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சுஷிலின் இருசக்கர வாகனத்தின் மீது, இடது பக்கமாக வந்த ஒரு லாரி பலமாக மோதியுள்ளது. இந்த எதிர்பாராத மோதலின் தாக்கத்தால் சுஷில் சாலையில் தூக்கி வீசப்பட, லாரியின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த வழியாகச் சென்ற ஆதர்ஷ் சிங் என்ற வழிப்போக்கர் விபத்தைப் பார்த்து சுஷிலின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதே வழியில் வந்த ஒரு டெம்போ ஓட்டுநர், தனது வாகனத்தை நிறுத்திப் படுகாயமடைந்த சுஷிலை மீட்டு உடனடியாக ஜோகேஸ்வரியில் உள்ள அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல உதவியுள்ளார்.
இருப்பினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் 2.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி சுஷில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சுஷிலின் 73 வயது தந்தை சுரேஷ்சந்திர சர்மா அளித்த புகாரின் அடிப்படையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
