தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒரு பிரச்சினையைக் கூட எதிர்கொள்ளும் திறன் இல்லை என்றும், அவர் முதலில் தேர்தலைச் சந்திக்கட்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி சரண்டர் ஆகிவிட்டது” என விஜய் விமர்சித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இபிஎஸ் கூறியதாவது,

“விஜய்க்கு அதிமுகவைப் பற்றி என்ன தெரியும்? முன்பு ஒரு பிரச்சினை நடந்தபோது 72 நாட்கள் அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. ஒரு கட்சித் தலைவர் என்றால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியது கடமை. ஆனால், அவர் அந்தக் கடமையைச் செய்திருக்கிறாரா? 15 நாட்கள் அலுவலகத்தையே மூடிவிட்டுச் சென்றவர்களால் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? ஒரு சிறு பிரச்சினையைச் சமாளிக்கும் திறன் கூட அவருக்கு இல்லை.”

தொடர்ந்து பேசிய அவர், “யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மக்களைச் சந்திக்கலாம். ஆனால், மக்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது. நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றியவர்கள், நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்க முடியும். விஜய் இன்னும் ஒரு தேர்தலைக்கூடச் சந்திக்கவில்லை. தேர்தலைச் சந்தித்தால்தான் யாருக்கு எவ்வளவு பலம் என்பது தெரியும். தமிழக வாக்காளர்கள் மிகுந்த விழிப்புணர்வு உடையவர்கள்; யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

தமிழகம் இன்று இந்தியாவிலேயே உயரிய நிலையில் இருப்பதற்கு அதிமுக ஆட்சியே காரணம் என குறிப்பிட்ட அவர்: மாணவர்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள், புதிய கல்லூரிகள் மற்றும் மாவட்டங்களை உருவாக்கியது, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட சாதனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

“அதிமுகவின் வரலாறு நாட்டு மக்களுக்குத் தெரியும். வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.