மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் காத்திருப்புப் போராட்டம் இன்று 11-வது நாளை எட்டியுள்ளது. பல ஆண்டுகளாகத் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வரும் தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர்கள், இன்று தலையில் முக்காடு போட்டு, அழுது, ஒப்பாரி வைத்து தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

​”கேட்காத பெண்களுக்குத் தேர்தல் பயத்தில் ரூ.5,000 வழங்குகிறீர்கள். ஆனால், தெருவில் இறங்கி 11 நாட்களாகக் கேட்டுப் போராடும் எங்களுடைய குரல் மட்டும் உங்களுக்குக் கேட்கவில்லையா? நாங்கள் உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆவேசமாகவும் கண்ணீருடனும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் இந்தப் பெண்களின் நூதனப் போராட்டம், அங்கிருந்த பொதுமக்களின் நெஞ்சைக் கனக்கச் செய்தது. அரசு தங்களை இனியும் ஏமாற்றாமல் உடனடித் தீர்வை வழங்க வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.