உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் வினோத் குமார் ஷர்மா, தனது ஓய்வு காலத்தை பயனுள்ளதாகக் கழிக்க விரும்பி, முதன்முதலாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். “எனக்கு வ்லாக் (Vlog) செய்யத் தெரியாது, இருந்தாலும் நேரத்தைச் செலவிட முயற்சி செய்கிறேன்” என்று அவர் மிக எளிமையாகப் பேசிய அந்த ஒரு வீடியோ, வெளியிட்ட 72 மணி நேரத்திலேயே சுமார் 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று இணையத்தையே அதிர வைத்துள்ளது. அவரது அந்த வெள்ளை உள்ளமும், தயக்கமில்லாத பேச்சும் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதை வென்றுள்ளது.

​இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் (Followers) எண்ணிக்கை சரசரவென உயர்ந்து 64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், பிரபல நடிகர்களான அனுபவம் கெர் மற்றும் ஜெய் பானுஷாலி போன்றோரும் தாத்தாவின் முயற்சியைப் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர். “உங்களுடைய அடுத்த வீடியோவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று பலரும் அவருக்கு ஊக்கமளித்து வருகின்றனர். எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல், உண்மையான மனதுடன் பேசினால் மக்களிடம் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு வினோத் குமார் ஷர்மா தாத்தாவே ஒரு மிகப்பெரிய உதாரணம்.