மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 70 வயது மூதாட்டி ஒருவருக்கு இதயம் வலதுபுறம் அமைந்திருக்கும் ‘டெக்ஸ்ட்ரோ கார்டியா’ எனும் அரிய வகை பிறவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாக்பூர் அருகே உள்ள சாவ்னர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்மணிக்குத் திடீரென நெஞ்சுவலியும் சுவாசக் கோளாறும் ஏற்பட்டதையடுத்து, ஹின்னா சாலையில் உள்ள லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஹிதேந்திர பகவத்கர், அவரது இதயம் இடதுபுறத்திற்குப் பதிலாக வலதுபுறம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த மூதாட்டி கடந்த 70 ஆண்டுகளாகத் தனது இதயம் வலதுபுறம் இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்த மருத்துவ சவாலில் மற்றொரு சிக்கலாக, அந்தப் பெண்ணின் இதயத்தின் முக்கிய நரம்பில் 90 சதவீத அடைப்பு இருந்தது.
இந்த இதயம் மற்றும் இரத்த நாளங்கள் அனைத்தும் இயல்பான நிலைக்கு நேர் மாறாக வலதுபுறம் அமைந்திருந்ததால், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வது மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும், டாக்டர் பகவத்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மிகுந்த திறமையுடன் செயல்பட்டு, வெற்றிகரமாக ஸ்டென்ட் வைத்து மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றினர்.
இந்நிலையில் மருத்துவ உலகில் ஒரு அதிசயம் எனக் கருதப்படும் இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் பெண் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்களின் இந்தச் சாதனைக்கு அம்மாநில அரசியல் தலைவர்களும் மூத்த மருத்துவர்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
