கேரள மாநிலம் கண்ணூரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது ஒன்றரை வயது குழந்தையை பாறையில் மோதி படுகொலை செய்த வழக்கில், தாய் சரண்யாவை குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கள்ளக்காதலன் விடுவிக்கப்பட்டார்.
கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா (30). கணவரை பிரிந்த இவருக்கு வியான் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நிதின் (34) என்பவருடன் சரண்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
தங்கள் கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருப்பதாக கருதிய சரண்யா, குழந்தையைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கடற்கரை பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் போன்ற பாறைகளில் குழந்தையை வீசியும், தலையை பாறையில் மோதச் செய்தும் சரண்யாவும் நிதினும் சேர்ந்து குழந்தையைக் கொன்றதாகப் புகார் எழுந்தது.
குழந்தையின் மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக சரண்யா தனது குழந்தையைத் திட்டமிட்டு கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சரண்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் நிதின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி பிரசாந்த் இன்று தீர்ப்பு வழங்கினார். பெற்ற குழந்தையையே கொன்ற கொடூரச் செயலில் சரண்யா ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால், அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 22, 23 -ல் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த கொலையில் நிதின் நேரடியாகச் சம்பந்தப்பட்டதற்கான போதிய ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்யத் தவறியதால், அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்தச் சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
