புனே கொண்ட்வா பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர் சந்திப்பு செயலி மூலம் வாலிபர் ஒருவர் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களால் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகோலி பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கு அந்தச் செயலி மூலம் அறிமுகமான ரஹீல் என்ற நபர், அவரை நேரில் சந்திக்குமாறு கொண்ட்வா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அழைத்துள்ளார்.
இதனை நம்பி அங்கு சென்ற அந்த வாலிபரை ரஹீல் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பாழடைந்த வயல்வெளிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றவுடன் அந்த நான்கு பேரும் சேர்ந்து வாலிபரைத் தாக்கி ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
அவரிடம் இருந்த விலையுயர்ந்த கைபேசி, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பணத்தைப் பறித்துக்கொண்டதுடன், அவரது வங்கி அட்டையைப் பயன்படுத்தி ஏடிஎம் மையத்தில் இருந்தும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில் கொண்ட்வா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர்களின் செயலி முகவரி, அலைபேசி எண் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
