சொமேட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ‘எடர்னல்’ (Eternal) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து தீபிந்தர் கோயல் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, பிளிங்கிட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான அல்பின்டர் சிங் திண்ட்சா, எடர்னல் குழுமத்தின் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.
தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினாலும், தீபிந்தர் கோயல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், இயக்குநராகவும் தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தனது பங்குதாரர்களுக்கு தீபிந்தர் கோயல் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “எடர்னல் குழுமம் எப்போதும் எனது வாழ்நாள் பணியாகவே இருக்கும். இந்தத் தலைமை மாற்றமானது நிறுவனத்தின் வளர்ச்சியை எந்தவிதத்திலும் பாதிக்காது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பெரிய நிறுவனத்தின் சட்டப்பூர்வ எதிர்பார்ப்புகளுக்கு முழுமையான நேரமும் கவனமும் தேவைப்படுகிறது.
ஆனால், நான் தற்போது அதிக சவால்கள் மற்றும் புதிய சோதனைகள் நிறைந்த புதிய வணிக யோசனைகளை ஆராய விரும்புகிறேன். அத்தகைய முயற்சிகளை நிறுவனத்திற்கு வெளியே மேற்கொள்வதே சிறந்தது என கருதுகிறேன்.” மேலும் எடர்னல் குழுமத்தின் வளர்ச்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புதிய சிஇஓ-வாகப் பொறுப்பேற்க உள்ள அல்பின்டர் சிங் திண்ட்சா ஏற்கனவே பிளிங்கிட் நிறுவனத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
