மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள குலோன் கிராமத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கட்டப்பட்ட பிரம்மாண்ட நீர்த்தேக்கம் (நீர்நிலை), பயன்பாட்டுக்கு வந்த முதல் நாளே சுக்குநூறாக உடைந்து கசிந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது!

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக, பல ஒப்பந்ததாரர்கள் மாறி மாறி ஆமை வேகத்தில் அரைகுறையாகக் கட்டி முடித்த இந்த நீர்த்தேக்கத்தில், முதன்முறையாகத் தண்ணீர் நிரப்பிய சில நிமிடங்களிலேயே சுவர்களில் பயங்கர விரிசல் ஏற்பட்டு, குளியலறை ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டுவது போலப் பல இடங்களில் நீர் பீறிட்டு அடித்துள்ளது.

இந்த விபரீதத்தால் அருகில் இருந்த ஒரு ஏழை விவசாயியின் வீடு முழுமையாக வெள்ளத்தில் மூழ்கிப் பரிதாபமாகச் சேதமடைந்தது.

“காலையில நிரப்புற தண்ணி சாயங்காலத்துக்குள்ள தீர்ந்துடுது, நர்மதை நதிக்கரையில இருந்தும் 2026 வந்தும் நாங்க தண்ணீருக்காக அலைறோம்” எனப் பொதுமக்களான பைரவ் சிங் தாக்கூர், முன்னாள் ஊராட்சித் தலைவர் ரமேஷ் படேல் ஆகியோர் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளனர்.

“>

இந்த மெகா ஊழல் குறித்து முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சஞ்சய் யாதவ் தற்போதைய அரசை கடுமையாகச் சாடியுள்ளார். விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் உடனடியாக களத்தில் குதித்து, பொறியியல் கல்லூரி நிபுணர்கள் மூலம் கட்டுமான மாதிரிகளைப் பரிசோதிக்கவும், தரம் குறைந்த பொருட்களைப் பயன்படுத்திய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்கவும் தனி விசாரணைக் குழு அமைத்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.