உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பாசத்துடன் வளர்க்க எண்ணிய அந்த குழந்தை, பிறந்த சில நாள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில், வாரணாசி நகரில் 17 வயதான சிறுமி, ஏழு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில், சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், ஏழு பேரும் அடையாளம் காணப்பட்டு, இதில் 5 பேர் முன்பே கைது செய்யப்பட்டனர். தேடப்பட்டு வந்த மீதமுள்ள 2 பேரும் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு, அந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பெண் குழந்தையை பெற்றடுத்தார். பிறந்த குழந்தையை பார்த்தபோது, “இவளுக்காகவே வாழவேண்டும்” என்ற உணர்வுடன், நெற்றியில் குங்குமம் வைத்து, பாசத்தோடு பால் புகட்டி, தாய் என்ற பெருமையுடன் வளர்க்கத் திட்டமிட்டிருந்தார் அந்த சிறுமி.
ஆனால் அதே இரவில், மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி காரணமாக, பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்த குழந்தை உயிரிழந்தது. இது குறித்து சவுபிபூர் காவல் நிலைய அதிகாரி அஜித் குமார் தெரிவித்ததாவது, “குழந்தையின் மரணம் தொடர்பாக மரபணு பரிசோதனை நடத்தப்படும். வழக்கின் போக்கு மற்றும் தாயாரின் உடல் நலனையும் கண்காணிக்கிறோம் என்றார்.
பிறந்த மகளை கையில் எடுத்து வளர்க்கும் கனவோடு இருந்த அந்த சிறுமி, தனது வேதனையை பகிர்ந்தபோது, “குழந்தையின் வளர்ச்சியிலேயே என் வாழ்வும் இருக்கும் என நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கையும் இன்று இல்லை” என கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
