ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக ஆற்றில் சிக்கி 20 மணி நேரத்துக்கு மேல் தத்தளித்த வாலிபர், விமானப்படை ஹெலிகாப்டரின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மல்கங்கிரி மாவட்டம் கொடமட்டூரு கிராமத்தைச் சேர்ந்த இர்மா ஷோகி (வயது 45) என்பவர், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இருந்து தனது படகில் வழக்கம்போல் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தின்போது, ஆற்றில் தத்தளித்த இர்மா ஷோகி, தன்னை ஆற்றின் மையப்பகுதியில் உள்ள பாறையில் ஏறிக் கொண்டு உயிர் காக்க முடிந்தது. ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாக, இரவு முழுவதும் அங்கேயே சிக்கிக் கொண்டு தவித்தார்.
நேற்று காலை, ஆற்றின் மையத்தில் பாறையில் ஒருவர் நிற்பதை அப்பகுதி கிராமவாசிகள் கவனித்ததும், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியை தொடங்கினார்கள். ஆனால் வெள்ளப் பெருக்கினால் அவரை தரையிலிருந்து மீட்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, விமானப்படையின் ஹெலிகாப்டர் உதவியுடன், சுமார் 20 மணி நேரத்துக்குப் பிறகு இர்மா ஷோகி உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் அவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
