மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஒரு நாய்க்கு ஆதார் அட்டை உருவாக்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஒரு நாய் உரிமையாளர் தனது செல்ல நாய்க்கு ஆதார் அட்டையை உருவாக்கியுள்ளார். இதில் நாயின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, “தந்தையின் பெயர்”, முகவரி என அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த விசித்திரமான சம்பவம் குவாலியர் அருகேயுள்ள சிமாரியா தால் என்ற கிராமத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. நாயின் பெயர் டாமி ஜெய்ஸ்வால், “தந்தையின் பெயர்” கைலாஷ் ஜெய்ஸ்வால் என்றும், பிறந்த தேதி 25.12.2010 என்றும் அந்த ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆதார் எண்ணாக 0700 0105 1580 எனத் தேடிக்கிடைக்கும் வகையில் உள்ளது.

இந்த தகவல்கள் தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், X (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இச்செயல் சமூக வலைதளங்களில் பலரையும் அதிர்ச்சி மற்றும் வியக்க வைத்துள்ளது.

ஒரு பயனர், “டாமி பாய்யா பிரபலமானார்!” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “இதுபோன்ற விஷயங்கள் மத்தியப் பிரதேசத்தில் தான் நடக்கும்!” என சாடியுள்ளார்.

மற்றொரு பயனர், “இந்த நாய்க்கு நல்ல எஜமானர் கிடைத்திருக்கிறார் – கடவுள் எல்லா நாய்களுக்கும் அப்படிப்பட்டவரைக் கொடுக்க வேண்டும்!” என சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார்.

இது நிஜமான ஆதார் அட்டையா, இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. ஆனால், இந்த ஆட்டையை உருவாக்கியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

மேலும் அதிகாரிகள், “விலங்குகளுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட முடியாது. இது முறையற்ற செயல். யார் இதில் ஈடுபட்டிருக்கிறார்களோ, அவர்கள்மீது விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.