திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விஜய், யுவராஜ் மற்றும் மதன் ஆகிய மூன்று தமிழர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பை நம்பிச் சென்று, நகர்ப்பகுதிகளிலிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அலுவலகத்தில் நேரில் மனு அளித்ததுடன், துறை சார்ந்த அமைச்சரையும் நேரில் சந்தித்துத் தங்களது துயரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் வழக்கமான நிர்வாக வேகத்தைக் காட்டாமல் போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

தமிழக அரசு, மத்திய வெளியுறவு அமைச்சகம், தாய்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தாய்லாந்து காவல் துறை ஆகியவை உடனடியாகத் தொடர்ச்சியான நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய வேண்டும். செல்போன் எண்களை உடனடியாக ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளை முழுமையாகப் பயன்படுத்தி அவர்கள் எங்குள்ளனர் என்பதைத் துல்லியமாகத் துப்பறிய வேண்டும்.

சொந்த ஊருக்குத் திரும்பும் வரை அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்து உண்மையான நிலவரங்களை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

“>

 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை எந்த இடத்திலிருந்தும் மீட்டு வருவோம் என்ற வாக்குறுதியைச் செயலில் நிரூபிக்க வேண்டிய தருணம் இதுவாகும். எனவே, எவ்வித உயிர் ஆபத்தும் ஏற்படுவதற்கு முன்பு மூன்று தமிழர்களையும் பத்திரமாக மீட்டுத் தாயகம் அழைத்து வரத் தமிழக அரசும் சம்மந்தப்பட்ட துறைகளும் உடனடியாகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.