வயது என்பது வெறும் எண் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் உடற்பயிற்சி ஆர்வலர் மிலிந்த் சோமன். தற்போது வியன்னாவில் (Vienna) விடுமுறையைக் கழித்து வரும் அவர், அங்கிருக்கும் பூங்கா ஒன்றில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் அசால்ட்டாகப் புல்-அப்ஸ் (Pull-ups) எடுத்து வியக்க வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அங்கிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள கியோர் (Györ) நகரத்திற்குத் தனது நீண்ட தூர ஓட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்தப் பனிக்காலத்திலும் அவரது தளராத உறுதி, பார்ப்பவர்களை “நம்மால் ஏன் முடியாது?” என்று யோசிக்க வைத்துள்ளது.
தன்னுடைய ஃபிட்னஸ் ரகசியம் பற்றிப் பேசிய மிலிந்த் சோமன், “உடற்பயிற்சி செய்ய மணிக்கணக்கில் தேவையில்லை, ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். ஆனால் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். நல்ல உணவு, போதுமான உறக்கம் மற்றும் அமைதியான மனநிலை இருந்தாலே எப்போதுமே இளமையாக இருக்கலாம் என்பது அவரது எளிமையான தத்துவம். 59 வயதைக் கடந்தும் ஒரு இளைஞருக்குரிய வேகத்துடன் அவர் ஓடும் அந்த வீடியோ, தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
