தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் அவர்கள் பொது இடத்தில் ரசிகர்களின் கூட்ட நெறிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழும் அதிர்ச்சிகரமான காணொளி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “எந்தச் சதியும் இல்லை, இது வெறும் குழப்பம் மட்டுமே” என்று பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ, கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஒரு உயிர்ச்சேதம் எப்படி மிக எளிதாக அரங்கேறக்கூடும் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது.

கரூர் போன்ற இடங்களில் நடந்த பெரும் கூட்ட நெறிசல்களை விட 100 மடங்கு பெரிய கூட்டத்தைக் கையாளும் போது, இதுபோன்ற ‘Mobbing Culture’ எனப்படும் முண்டியடிக்கும் பழக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் எச்சரிக்கிறது. விஜய் மீதான அன்பினால் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொள்வது, அவருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.

ரசிகர்களின் இந்த அதீத ஆர்வம், ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காத நெரிசலாக மாறி, பலரது உயிருக்கே உலை வைக்கும் சூழலை உருவாக்கும். “அன்பு காட்டுவதில் தவறில்லை, ஆனால் அது ஆபத்தில் முடியக்கூடாது” எனப் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் அவர்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, அங்கு வரும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்த ‘ஆக்ரோஷமான கலாச்சாரத்தை’ மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.