அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு ராமர் கோவில் கட்டும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கர்ப்ப கிரகத்தில் ராமரின் குழந்தை வடிவ சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில், அந்த சிலையை செதுக்குவதற்காக நேபாள நாட்டில் உள்ள முஷ்டாங் மாவட்டத்திலுள்ள முக்திநாத் அருகே கண்டாகி ஆற்றின் கரையில் 2 அபூர்வ பாறைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாறைகள் சுமார் 6 கோடி வருடங்கள் பழமையானவை. இதில் ஒரு பாறை 26 டன் எடையும் மற்றொரு பாறை 14 டன் எடையும் இருக்கிறது.

இந்த பாறைகளை சரக்கு லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 25-ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் தேசிய செயலாளர் ராஜேந்திர சிங் பங்கஜ் கிளம்பினார். இந்த சிலை நேற்று முன்தினம் அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் சிறப்பு வழிபாடு பாறைகளுக்கு நடத்தப்பட்டது. இதனையடுத்து நேபாள நாட்டின் ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அரியவகை பாறைகளை ராம ஜென்ம பூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த பாறைகளில் இருந்து குழந்தை வடிவ ராமர் சிலை செதுக்கப்பட்டு கோவில் கர்ப்ப கிரகத்தில் நிறுவப்படும்.