திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, கடந்த 2023-ஆம் ஆண்டு 6 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த நமச்சிவாயம் (65) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதியவரைக் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே. சுரேஷ்குமார், முதியவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி ஆணையிட்டார். இந்த வழக்கில் திறம்படச் செயல்பட்டுத் தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் அரசு வழக்கறிஞரை மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் பாராட்டியதுடன், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.