முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் ஆகியோரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ராஜினாமாவை பாஜக தேசிய தலைமை இன்று ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கம் தொடங்கி வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.அண்ணாமலையின் இந்த புதிய அறிவிப்பைத் தொடர்ந்து, அவரது இயக்கத்தில் இணைவதற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்த பலரும் இதில் ஆர்வமுடன் இணைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டதோடு, அவரது புதிய கட்சி முயற்சிக்குத்தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
