தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. கம்யூனிஸ்டுகள் தவிர மற்ற கூட்டணிக் கட்சிகள் விஜய்யின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ள நிலையில், தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவடைவதற்குள் எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தவெக ஆட்சி நீடிக்காது என்று அதிரடியாகக் கூறியுள்ளார். திமுகவினர் யாரும் தற்போதைய தேர்தல் முடிவுகளால் சோகமாக இருக்கத் தேவையில்லை என்றும், மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து போராடத் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், பொது மேடையில் விவாதிக்க முடியாத பல காரணங்களால் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்றும், மு.க.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.