இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், அலுவலக வேலை, செல்போன் மோகம் எனப் பல காரணங்களால் பெரும்பாலானோர் இரவு நீண்ட நேரம் கண் விழித்து, 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகவே தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், போதுமான இரவுத் தூக்கம் இல்லாவிட்டால், உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்பாராத அளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது, உடலின் பல முக்கிய அமைப்புகளைச் சீர்குலைத்து, நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆய்வுகளின்படி, 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இரட்டிப்பாகிறது. மேலும், இது உடல் பருமன் அதிகரிக்கவும் காரணமாகிறது.

காரணம், குறைவான தூக்கம் பசியைத் தூண்டும் ஹார்மோனை அதிகரித்து, கண்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேர்கிறது. இரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவதாகவும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. 7 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தொடர்ந்து 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்குவது மூளையில் நச்சுக்கோள் குவிவதற்குக் காரணமாகி, எதிர்காலத்தில் அறிவாற்றல் குறைபாடு அல்லது மறதி நோய் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவனச் சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றன.

மேலும், சரியான தூக்கம் இல்லையெனில் மனச்சோர்வு, கவலை, எதிர்மறையான உணர்வுகள், அதிக கோபம், பயம் மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்ச்சி ரீதியான பாதிப்புகளும் உண்டாகும். சிலர் தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை நாடுகின்றனர்; இது ஞாபக சக்திக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், போதிய தூக்கம் இல்லாவிட்டால் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட தீவிரமான பாதிப்புகள் ஏற்படும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமான தூக்கத்தைப் பெற ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் அவசியம். ஒரே நேரத்தில் தூங்குதல், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற பழக்கங்களால் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம்.