கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸில் இருக்கும் கலெக்டர் பங்களா, திருச்சி சாலையில் இருக்கும் நெடுஞ்சாலை ஊழியர்கள் குடியிருப்பு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகள் சந்தன மரங்கள் வெட்டி தொடர்ச்சியாக கடத்தப்பட்டதால் போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், ஷேக், முகம்மது அலி ஜின்னா, திருப்பூரை சேர்ந்த செந்தில், பிஸ்டர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள், அரிவாள், ரம்பம் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் 5 பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில், பகல் நேரத்தில் நாங்கள் இளநீர் மற்றும் பழங்களை விற்பனை செய்வது போல மொபட்டில் கண்காணித்து வந்தோம். இந்நிலையில் நன்றாக வளர்ந்த சந்தன மரங்கள் எங்கு இருக்கிறது? என்பதை நோட்டமிட்டு இரவு நேரத்தில் சத்தம் இல்லாமல் அவற்றை வெட்டி கடத்தி விடுவோம். சுமார் 30 கிலோ சந்தனக்கட்டைகளை ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்து ஐந்து பேரும் சமமாக பிரித்துள்ளோம். பொங்கல் செலவுக்கு பணம் இல்லாததால் சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.