இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயில் காரணமாக பல மாநிலங்களில் பள்ளிகளுக்கும் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.