நாட்டில் உள்ள பழமையான மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது. அதில் நாட்டில் உள்ள பழமையான மொழிகள், கலைகள் மற்றும் கலாச்சாரங்கள் போன்றவற்றை வளர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கல்லூரி பாடத்திட்டங்களில் இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரங்கள் இடம் பெற வேண்டும். இந்த பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி கொடுக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு திட்டம் குறித்த விவரங்கள் போன்றவைகள் யுஜிசி இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அவற்றைப் பின்பற்றி கல்லூரிகள் தரப்பில் உரிய பயிற்சிகள் வழங்கி பாடத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.