பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதன் போது பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மே 9 அன்று இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மோதலை நிறுத்தின.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற விமானப்படை அதிகாரிகள் கருத்தரங்கில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு AWACS வான்வழி கண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். இந்த வெற்றிக்கு ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் கூறினார். மேலும், மே 7 தாக்குதலின் முன்பும் பின்னரும் பயங்கரவாத முகாம்களின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு விளக்கினார்.

ஆனால், பாகிஸ்தான் தரப்பு இதை முற்றிலும் மறுத்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “இந்தியாவின் எந்த விமானமும் எங்கள் தாக்குதலில் அழிக்கப்படவில்லை. இந்தியா மூன்று மாதங்களாக இதுகுறித்து மவுனமாக இருந்தது, ஆனால் நாங்கள் உடனடியாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு விரிவான தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.