கடந்த 2016-ம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி விஜயகுமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகுமாறு 442 பேருந்துகள் ஏப்ரல் மாதத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வர இருக்கிறது என்றார்.

அதன் பிறகு இதில் 242 பேருந்துகள் சென்னையில் இயக்கப்பட இருக்கிறது. மதுரை மற்றும் கோவையில் தலா 100 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சரி செய்யப்பட்டு வருவதால் 100% தாழ்தள பேருந்துகளை இயக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மட்டும் 37.4 சதவீத பேருந்துகள் தாழ்தள பேருந்துகளாக உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், 40 சதவீத பேருந்துகள் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்துகள் என்று அதை சொல்லக்கூடாது எனவும் 60 வயதுக்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் தற்போதும் பேருந்துகளில் ஏறுவது என்பது சவாலான முறையில் இருப்பதால் 100 சதவீதமும் தாழ்தள பேருந்துகளாகவே கொள்முதல் செய்ய வேண்டும் என கூறினார். ஆனால் அரசு வழக்கறிஞர் அதில் சிக்கல் இருக்கிறது என்று கூறியதால் நீதிபதிகள் அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பது குறித்தும் தமிழக அரசு என்னென்ன தொழில்நுட்ப பிரச்சனைகள் இருக்கிறது என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை ஜனவரி 20-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.