அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணை பல கட்டங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பு ஓபிஎஸ் தரப்பு வாதத்தில், எம்ஜிஆர் வடிவமைத்த கட்சியின் கொள்கைகளை இபிஎஸ் தரப்பு முற்றிலும் மாற்றி அமைக்க முயற்சி செய்வதாகவும், கட்சியின் பல பிரச்சினைகளை முன்னின்று சமாளித்து கட்சிக்காக பாடுபட்ட என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சுயநலத்திற்காக இபிஎஸ் நீக்கிவிட்டார் என்றும் பல கட்டங்களாக வாதிடப்பட்டது.

அதோடு ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவும் தனக்கு இருப்பதால் சிலரின் சுயநலத்திற்காக அதிமுக கட்சி பலியாகி விடக்கூடாது எனவும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர வேண்டும் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இபிஎஸ் தரப்பு வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில், இரு தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வெளியாகும் தேதியை குறிப்பிட்டோ அல்லது குறிப்பிடாமலோ  ஒத்திவைப்பார். மேலும் அதிமுக கட்சியில் வழக்கு தொடர்பான தீர்ப்பு நெருங்கி வருவதால் தலைமை பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.