வெளிநாடுகளில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்ப்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், லண்டனில் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த மானவ் ஷா என்ற பிசியோதெரபிஸ்ட், அந்த வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நல்ல சம்பளம், சொகுசான வாழ்க்கை முறை இருந்தபோதிலும், தனக்கு அங்கு ஒரு சிறையில் இருப்பது போன்ற உணர்வே இருந்ததாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

​லண்டனில் தான் அனுபவித்த தனிமையும், சொந்த நாட்டு மனிதர்கள் மற்றும் பெற்றோரை விட்டுப் பிரிந்து இருந்த ஏக்கமுமே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் குறைவான செலவில் நிம்மதியாக வாழ முடியும் என்றும், தனது தொழில்முனைவோர் (Entrepreneur) கனவை நனவாக்க இந்தியா தான் சரியான இடம் என்றும் அவர் முடிவெடுத்துள்ளார். வெளிநாடு சென்றாலே வெற்றி என நினைப்பவர்களுக்கு மத்தியில், நிம்மதியும் பாசமுமே முக்கியம் என்ற இவரது கதை தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.