இந்தியாவின் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்த இயக்கப்படும் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயிலில், பயணிகள் சிலர் ஓடும் ரயிலின் உள்ளேயே பக்திப் பாடல்களைப் பாடி, சிலைகளை வைத்து ஆர்த்தி எடுத்து பூஜை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேல் படுக்கையை (Upper Berth) ஒரு சிறிய கோயில் போல அலங்கரித்து, பூமாலைகள் சூட்டி பக்தர்கள் இந்த வழிபாட்டை நடத்தியுள்ளனர்.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர், “இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பக்தியின் அடையாளம் இது” என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினரோ, “பொதுப் போக்குவரத்து என்பது அனைவருக்கும் பொதுவானது, அங்கு இது போன்ற மதச் சடங்குகள் செய்வது மற்ற பயணிகளின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும்” என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

​மேலும், குறுகிய பாதையில் கூட்டமாக நின்று பூஜை செய்வது, திடீர் பிரேக் அல்லது அவசர காலங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்திய ரயில்வே சட்டப்படி மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.