திருச்சியில் போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் கொடிய செயலாக மாறியுள்ளது. புத்தூருக்கு அருகிலுள்ள கல்லாங்காடு பகுதியில், சஞ்சய் (20) என்ற இளைஞர் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த மரணம் போதை பழக்கத்தினால் நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்சியில் கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசி பழக்கத்தால் நிகழ்ந்த மூன்றாவது மரணம் இது என்பதால், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகமும் நிலவுகிறது.
ஏற்கனவே ஜூன் 8-ம் தேதி இளம்பெண் ஒருவரும், ஜூன் 30-ம் தேதி இளைஞர் ஒருவரும் இதேபோன்ற போதை பழக்கத்தால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் இந்த ஆபத்தான போதை பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.
