ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் சர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட மூவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது மனோஜ் சர்மா என்பவருக்கும் அவரது மனைவி தீபிகாவிற்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு தீபிகா தனது கள்ளக்காதலன் தேவேஷை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். தேவேஷ் தனது நண்பன் விஷ்ணுவுடன் அங்கு வந்துள்ளார். மூவரும் சேர்ந்து மது அருந்திய பின், திட்டமிட்டபடி மனோஜ் சர்மாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த பின், மனோஜ் சர்மா தூக்கத்திலேயே இறந்துவிட்டது போலக் காட்டுவதற்காகச் சடலத்தை மெத்தையில் கிடத்தியுள்ளனர். அடுத்த நாள் காலை, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்துள்ளனர்.
வீட்டில் மரணம் நிகழ்ந்தும், அங்கு துக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இறுதி ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். மனோஜின் உடலைச் சோதித்தபோது, கழுத்தில் நகக்கீறல்களும் தழும்புகளும் இருப்பதைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மனோஜ் சர்மா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி தேவேஷை கரோலி பகுதியில் வைத்து போலீஸார் கைது செய்தனர். மனைவி தீபிகா மற்றும் அவரது கூட்டாளியிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளாக நீடித்த கள்ளக்காதல் விவகாரமே இந்தத் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
