சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப் பள்ளியில், 2026-2027 கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை பணிகளைத் தமிழகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தார். அதன் பின்னர் பள்ளிக்கு வந்த புதிய மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடை, புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி இனிப்புடன் வரவேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மொத்தம் 4 லட்சம் புதிய மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டு வருகிறோம்; இதுவரை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்மோகன், தான் அமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதலில் கையெழுத்திட்டதே பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்துத்தான் என்றார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நீதிமன்ற வழக்குகளுக்குப் பின் விரைவில் முறையாக நிரப்பப்படும் என்றும் உறுதியளித்தார்.
குறிப்பாக, பள்ளி குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் வன்கொடுமைகள் அல்லது அத்துமீறல்கள் ஏற்பட்டால், அவர்கள் மீது இரக்கமில்லாமல் மிகக் கடுமையான சிறப்பு நடவடிக்கைகள் பாயும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
