நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி நேரிட்ட கோர விபத்தில், 4 கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், இந்த விபத்துக்குக் காரணமான கல்லூரி பேருந்து ஓட்டுநரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் பிரவீன் (23) என்பவரைக் கைது செய்தனர். ஓட்டுநரின் கடுமையான அலட்சியமும் அஜாக்கிரதையுமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் ஓட்டுநர் பிரவீன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 4 இளம் மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் நிலவி வந்த பதற்றத்தைச் சற்று தணித்துள்ளது.
