ஈரோடு மாவட்டம் ராமபயனூரில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவில் தனிப்பட்ட விரோதம் காரணமாக சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​சம்பவத்தன்று காலை மாணவர்களுக்கு வழங்க உணவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அப்போது, அங்கிருந்த உணவுப் பொறுப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் உணவை ஆய்வு செய்தபோது, அதில் சாணி பவுடர் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உணவை உட்கொள்வதற்கு முன்பே இது கண்டுபிடிக்கப்பட்டதால், மிகப்பெரிய அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

​இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, “ராமபயனூர் பள்ளியில் காலை உணவில் சாணி பவுடர் கலக்கப்பட்டது தனிப்பட்ட விரோதம் காரணமாகவே நடந்துள்ளது. மாணவர்களுக்கு உணவை வழங்குவதற்கு முன்பு, அதன் மாதிரியை (Food Sample) தனியாக எடுத்துச் சேமித்து வைக்கும் நடைமுறை ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. இந்நடைமுறை மூலமே இந்த சதி திட்டம் கண்டறியப்பட்டது.

இனிவரும் காலங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் உணவு மாதிரி எடுக்கும் நடைமுறையைக் மிகக் கடுமையாகப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். குழந்தைகள் உணவில் விஷம் கலக்க முயன்ற நபரைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.