திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் முன்வைக்கும் நிபந்தனைகள் அவ்வப்போது விவாதங்களை ஏற்படுத்துவதுண்டு. அந்த வகையில், 37 வயது விவாகரத்தான நபர் ஒருவர், தனக்கு அமையப்போகும் பெண் குறித்து முன்வைத்த ‘அடுக்கடுக்கான’ நிபந்தனைகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பிரபல திருமணத் தரகரும் (Matchmaker) உறவுமுறை ஆலோசகருமான ஓந்த்ரிலா கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில் ஐஐடி-யில் (IIT) பயின்று, ஒரு நிறுவனத்தில் இயக்குநராகப் பணிபுரியும் 37 வயது விவாகரத்தான நபர் ஒருவர் தன்னை அணுகியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர் தனக்கு வரன் தேடச் சொன்னபோது முன்வைத்த நிபந்தனைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அவை மணமகள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கு முன் திருமணம் ஆகாதவராக (Unmarried) இருக்க வேண்டும்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, அந்தப் பெண்ணுக்கு இதற்கு முன் எந்த ‘காதல் உறவுகளும்’ இருந்திருக்கக் கூடாது போன்றவைகள் ஆகும்.
இந்த நிபந்தனைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஓந்த்ரிலா, “உங்களுக்கு ஏற்கனவே விவாகரத்து ஆகியிருக்கும் நிலையில், ஒரு இளம்பெண் உங்களை ஏன் திருமணம் செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த நபர், “முன்பு பல காதல் உறவுகளில் இருந்த பெண்கள் துரோகம் செய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன” என்று மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.
மேலும், தனது விவாகரத்து குறித்துக் கேட்கப்பட்டபோது, “நான் ஒரு ஆண், என்னுடைய கடந்த காலத்தை யாரும் கேள்வி கேட்கக் கூடாது” என்று அவர் கூறியது ஆணாதிக்கத்தின் உச்சம் என ஓந்த்ரிலா சாடியுள்ளார்.
இந்த நபரின் எதிர்பார்ப்புகள் எதார்த்தத்திற்குப் புறம்பாகவும், பாலினப் பாகுபாடு கொண்டதாகவும் இருப்பதாகக் கருதிய ஓந்த்ரிலா கபூர், அவருக்கு வரன் தேடித்தரும் பணியை ஏற்க மறுத்துவிட்டார். “திருமணத்திற்குத் தகுதி என்பது பரஸ்பரம் இருக்க வேண்டும்; ஒருதலைப்பட்சமான அதிகாரமாக இருக்கக் கூடாது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ஓந்த்ரிலாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த நபரின் பிற்போக்குத்தனமான எண்ணங்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “பெண்களை ஒரு பொருளாகப் பார்க்கும் மனநிலை இன்னும் மாறவில்லை” என்றும், “விவாகரத்தானவர்கள் சகஜமான வாழ்க்கையைத் தேட வேண்டுமே தவிர, இதுபோன்ற சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதிக்கக் கூடாது” என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
