கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலாவிற்காக குடகு மாவட்டத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள ஒரு விடுதியில் அவர் தங்கியிருந்தபோது, அங்கு பணிபுரிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விருஜேஷ் குமார் என்பவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடுமை குறித்து அந்தப் பெண் விடுதி உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவருக்கு உதவ முன்வராத உரிமையாளர், பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனைப் பறித்துக் கொண்டதுடன், மூன்று நாட்களாக அவரை அங்கேயே சிறைபிடித்து வைத்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் விபரீதம் ஏற்படும் என மிரட்டியதுடன், தங்கும் விடுதியின் வைஃபை (Wi-Fi) இணைப்பையும் துண்டித்து யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாதபடி செய்துள்ளார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, மைசூரு செல்வதாகக் கூறி அங்கிருந்து தப்பிய அந்தப் பெண், உடனடியாக அமெரிக்கத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விவரித்தார். அமெரிக்கத் தூதரகம் சார்பில் கர்நாடக காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
தூதரகத்தின் புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட போலீஸார், பாலியல் வன்கொடுமை செய்த விருஜேஷ் குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து மிரட்டல் விடுத்த விடுதி உரிமையாளர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவர்களை மே 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் குடகில் இத்தகைய சம்பவம் நடந்தது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
