சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல போர் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த 69 வயது முதியவர் ஒருவர், ஹோட்டலின் பில் தொகையான 64 ஆயிரம் ரூபாயைச் செலுத்தாமல் ரகசியமாகத் தப்பியோடியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தான் தங்கியிருந்த அறையில் ஹோட்டல் நிர்வாகத்தால் தனியாக வழங்கப்பட்டிருந்த சுமார் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பையும் அவர் திருடிச் சென்றார். இது குறித்து ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி, தொழில்நுட்ப உதவியுடன் அந்த முதியவரின் மொபைல் போன் இருப்பிடத்தை ஒடிசா மாநிலத்தில் கண்டுபிடித்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட முதியவரின் பெயர் பிக்சன் ஜான் என்பதும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் பிக்சன் ஜான் வாக்குமூலத்தைக் கேட்டு போலீசாரே நிலை குலைந்து போயுள்ளனர்.

இந்த முதியவர் கடந்த 1990ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 36 வருடங்களாக இந்தியா முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட முன்னணி சொகுசு ஹோட்டல்களில் தங்கி இதேபோல பில் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

சொகுசு ஹோட்டல்களுக்குச் சென்று நன்றாகச் சாப்பிட்டு, சொகுசாக வாழ்ந்துவிட்டு, அங்கிருக்கும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடிக் கொண்டு தப்பி ஓடுவதையே இவர் தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மேலும், இவர் ஏற்கனவே பல்வேறு குற்றங்களுக்காக இந்தியாவின் பல சிறைகளில் சுமார் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதும், டெல்லி சிறையில் இருந்தபோது நாட்டின் பெரிய பெரிய குற்றவாளிகளுடன் இவருக்கு தொடர்பு இருப்பதும், அதன் பின்னரே இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.