மத்திய பிரதேச மாநிலம் சாத்னா (Satna) மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், தாளசீமியா (Thalassaemia) நோயால் பாதிக்கப்பட்ட ஆறு சிறுவர்களுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு அவர்கள் எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 முதல் 15 வயதுக்குட்பட்ட இந்தச் சிறுவர்களுக்கு, கடந்த ஜனவரி முதல் மே மாத காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஒரு சிறுவனின் பெற்றோரும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மற்ற ஐந்து சிறுவர்களுக்கு ரத்த வங்கியின் கவனக்குறைவே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறி, ரத்த வங்கிப் பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் மற்றும் இரண்டு ஆய்வக நுட்புணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் 350 ரத்த தானம் செய்தவர்களைத் தேடி வரும் அதிகாரிகள், இதில் ஏதேனும் ‘விண்டோ பீரியட்’ (Window Period) காரணமாகத் தொற்று கண்டறியப்படாமல் போனதா அல்லது போலி ரத்த விற்பனை கும்பலின் வேலையா எனப் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, மருத்துவமனை அருகே சட்டவிரோதமாக ரத்தம் விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
