சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுல்லைவாயல் செந்தில் நகரில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரிடம் அவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காக கடந்த ஆண்டு 35 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் வினோத்திற்கு வீட்டை கிரையம் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதற்கிடையில் வேறு ஒருவருக்கு வெங்கடேசன் அவரது வீட்டை கிரையம் செய்து கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த வினோத் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். அப்போது பணத்தை கொடுக்க மறுத்து வெங்கடேசனும், அவரது மனைவி கோமதியும் வினோத்தை மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து வினோத் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசன், கோமதி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.