உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவின் கிரீன் சிட்டி பகுதியில், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய சூர்ய பிரதாப் சிங் (35) கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவதுசூர்ய பிரதாப் சிங், ரத்னா (46) எனும் பெண்ணுடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். ரத்னாவுக்கு 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக சூர்ய பிரதாப் சிங் மற்றும் ரத்னாவுக்கு இடையில் குடும்பத் தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரத்னாவின் மூத்த மகளிடம் சூர்ய பிரதாப் சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மகள் தாயிடம் புகார் கூறியதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே தகராறு தீவிரமடைந்தது
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில் ஆத்திரமடைந்த ரத்னா, தனது இரு மகள்களுடன் இணைந்து சூர்ய பிரதாப் சிங்கை தள்ளிவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு, ரத்னா காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சூர்ய பிரதாப் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரத்னாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் கொன்றேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் ரத்னா மற்றும் அவரது இரு மகள்களும் கைது செய்யப்பட்டனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், கொலை சம்பவம் தொடர்பாக, “என் மகன் சொத்துக்காகக் கொலை செய்யப்பட்டுள்ளார்” என சூர்ய பிரதாப் சிங்கின் தந்தை காவல் நிலையத்தில் தனி புகார் அளித்துள்ளார்.
