பெங்களூரு பனசங்கரி பகுதியில் வசித்து வந்த கீர்த்தி என்ற இளம்பெண், தனது கணவர் குருபிரசாத் அளித்த வரதட்சணை கொடுமையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில், கீர்த்தியின் பெற்றோர் சுமார் 35 லட்சம் ரூபாய் வரை திருமணத்திற்காகச் செலவு செய்துள்ளனர். எனினும், சொந்தமாக வீடு கட்டப் பணம் தேவைப்பட்டதால், குருபிரசாத் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்த கீர்த்தி, ஏற்கனவே அவர்கள் வாங்கிய கடன்களைக் கருதி மேலும் பணம் கேட்க மறுத்துள்ளார். இருப்பினும், குருபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரின் நெருக்கடியால் கீர்த்தியின் பெற்றோர் மேலும் 8 லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்று வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குருபிரசாத்தின் பேராசை அடங்காமல் மீண்டும் கீர்த்தியை அடித்துத் துன்புறுத்தியதால், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த 24-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கீர்த்தியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குருபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.