காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது, அவர்களுடன் துணிச்சலாகப் போராடி உயிர்நீத்த வீரர் அடில் உசைன் ஷாவிற்கு ஜம்மு காஷ்மீர் அரசு உயரிய விருது அறிவித்துள்ளது.
மேலும் ஹபத்னார் கிராமத்தைச் சேர்ந்த அடில் உசைன் ஷா, பயங்கரவாதிகளின் தாக்குதலைத் துணிவுடன் எதிர்கொண்டு சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இந்த ஈடு இணையற்ற வீரத்தைப் போற்றும் வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதானது ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பு மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியதாகும். அடில் உசைன் ஷா தவிர, ஜம்மு காஷ்மீர் அரசு மொத்தம் 56 பேருக்கு பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக விருதுகளை அறிவித்துள்ளது.
இதில் காவல்துறை துணை ஆய்வாளர் நிகில் குமார், 12 செய்தியாளர்கள் மற்றும் மறைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது ஷபி பண்டிட் ஆகியோரும் அடங்குவர். நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிய ஒரு சாமானியனின் வீரத்திற்கு அரசால் வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
