தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள முதல் தேசிய அளவிலான பேட்டியில் பல அதிரடி கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“தேர்தலில் நான் வெற்றி பெறுவேன்; நான் ஏன் கிங் மேக்கராக இருக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், தான் ஒருபோதும் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசியலில் தனக்கு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரே ரோல் மாடல்கள் என்றும், தான் நடிகர் ஷாருக்கானின் ரசிகன் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சினிமா நட்சத்திரமாக இருந்து அரசியல் தலைவராக மாறியது எளிதான மாற்றமாக இருக்கவில்லை என்று குறிப்பிட்ட விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தன்னை இன்னும் மனதளவில் பாதித்துள்ளதாகக் கூறினார். மேலும், தனது ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவது கவலையளிப்பதாகவும், அரசியலுக்கு வந்ததால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள தான் முன்பே தயாராக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகாலமாக மக்களுடன் கொண்டுள்ள ஆழமான பிணைப்பே தனது அரசியல் பயணத்தின் பலம் என்றும், இது ஒரு தேர்தலுக்கானது மட்டுமல்ல, நீண்ட கால அரசியல் பயணம் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
