நைஜீரிய நாட்டில் ரயில் நிலையத்தில் 32 பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பிணைக்கைதிகளாக ஒரு நபர் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் போகோ ஹராம், அல்கொய்தா மற்றும் ஐஎஸ் ஆகிய தீவிரவாத இயக்கங்களும், பல கிளர்ச்சியாளர்கள் அமைப்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதேபோன்று, கால்நடைகள், பள்ளி குழந்தைகள் மற்றும் மக்களை கடத்திச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன.

பண்டிட்ஸ் என்ற கும்பல், இந்த கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கும்பல், பொது மக்களையும், பாதுகாப்பு படையினரையும் நோக்கி அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நைஜீரிய நாட்டின் இடோ என்னும் மாகாணத்தில் அமைந்திருக்கும் டாம் இகிமி என்ற ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு நபர் அங்கிருந்த பயணிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்.

இதில் பலரும் பலத்த காயமடைந்தார்கள். மேலும், ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் 32 பேரை பிணையக்கைதிகளாக கடத்தினார். இதனைத்தொடர்ந்து, இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அந்த நபரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கடத்தப்பட்டவர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.