தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில், கணவனின் சந்தேகப் புத்தியால் மனமுடைந்த இளம் தாய், தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கொள்ளகூடம் கிராமத்தைச் சேர்ந்த மேகல மகேஷ் என்பவருக்கும், ஐஸ்வர்யா என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஜான்சி மற்றும் பண்டு என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

மேலும் ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட மகேஷ், அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சில காலம் பெற்றோருடன் வசித்து வந்த ஐஸ்வர்யாவை, சமீபத்தில் உறவினர்கள் சமரசம் செய்து கணவர் வீட்டில் கொண்டு வந்து விட்டனர். ஆனால், அங்கு கணவர் இல்லாத நிலையில், மாமியார் வீட்டில் ஏற்பட்ட கொடுமைகளைத் தாங்க முடியாமல் ஐஸ்வர்யா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்கொலைக்கு முன்னதாக ஐஸ்வர்யா எழுதிய உருக்கமான கடிதத்தில், தனது மரணத்திற்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, “என் நடத்தையில் சந்தேகம் இருந்தால், என் மகனின் டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், “மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் உனக்கு மகனாகப் பிறக்கிறேன், பெண்ணாகப் பிறப்பதும் வாழ்வதும் இந்த உலகில் அசாத்தியமானது” எனக் கூறி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 32 லட்ச ரூபாய் வரதட்சணை மற்றும் 30 சவரன் தங்கத்திற்காகவே அவர்கள் தன்னைத் திருமணம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.