இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன் சார், ஈரான் மீதான ராணுவத் தாக்குதல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு அந்நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மோடியின் பயணத்தின் போது அமைதி மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தாமதம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பிரதமர் மோடி இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் நடவடிக்கை பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும் புதுடெல்லி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் இந்தியா தீவிரமான ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் இந்த வெளிப்படையான அறிவிப்பு, சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் செல்வாக்கையும், இந்தியாவுடனான இஸ்ரேலின் நெருக்கமான நட்புறவையும் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.