மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி கடத்தப்பட்டு, பெங்களூருவில் 31 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டியூஷன் சென்றபோது கடத்தப்பட்ட அந்தச் சிறுமியை, யோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் பெங்களூருவிற்கு அழைத்துச் சென்று ஒரு மாதம் சித்ரவதை செய்துள்ளனர்.

மார்ச் 1-ம் தேதி போலீசார் சிறுமியை மீட்ட போதிலும், குற்றவாளிகள் கொடுத்த கொலை மிரட்டலால் பயந்துபோன சிறுமி, நடந்த கொடுமைகளைச் சொல்லாமல் இரண்டு மாதங்கள் மௌனமாக இருந்துள்ளார். பின்னர் தனது தாயின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே, நடந்த உண்மைகளை உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், அவரது வீட்டு உரிமையாளர் குட்டி ரத்தோர் மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் சிறுமியின் தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் அவரை அறையில் பூட்டி வைத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டு உரிமையாளர், அவரது மகன் உட்பட 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

முக்கிய குற்றவாளியான யோகேஷ் ரத்தோர் சிவபுரியில் பிடிபட்ட நிலையில்,தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு மாதம் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட சிறுமியின் கதை தற்போது சமூக ஊடகங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.