கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனையில், கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் பணியில் இருந்த இளம் மருத்துவர் வந்தனா தாஸ் (23), சிகிச்சைக்காக வந்த பள்ளி ஆசிரியர் சந்தீப் என்பவரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில், கைதான ஆசிரியர் சந்தீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை அரிதான ஒன்றாகக் கருதிய நீதிமன்றம், பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கொலை முயற்சி மற்றும் மருத்துவமனை தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட 30 ஆண்டு கால சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகே, சந்தீப்பின் ஆயுள் தண்டனை தொடங்கும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தண்டனை போதாது என்றும், குற்றவாளிக்கு இன்னும் கடுமையான தண்டனை பெற்றுத் தர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
