நேபாளத்தின் லெண்டே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கனமழை அல்லது நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம் சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனியாற்றின் பெரும் பகுதி சரிந்து விழுந்த ‘பனி-பாறைச் சரிவே’ இந்த பேரழிவிற்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. வெறும் 30 நிமிடங்களில் ஆற்றின் நீர்மட்டம் 9 மீட்டர் வரை உயர்ந்து போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளைச் சூறையாடியுள்ளது.
இந்த பேரழிவிற்குப் பின்னணியில் புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளில் நேபாளம் தனது பனிப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை இழந்துள்ளதுடன், பனியாறுகள் உருகும் வேகமும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான வெப்பநிலையால் நிலை குலைந்த பனியாறுகளும், பாறைகளும் திடீரெனச் சரிந்து ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்து, பின்னர் பெருவெள்ளமாக உருவெடுத்துள்ளதே இந்த அதிர்ச்சி சம்பவத்திற்குக் காரணம்.
நேபாளத்தில் உற்பத்தியாகும் இமயமலை ஆறுகள் இந்தியாவை நோக்கிப் பாய்வதால், இந்தச் சம்பவம் இந்திய எல்லைப் பகுதிகளிலும் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. நேபாள மலைப் பகுதிகளில் ஏற்படும் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் கீழ்ப் பகுதியில் உள்ள இந்திய ஆற்றங்கரைகளைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும். இதன்காரணமாக, அசம்பாவிதங்களைத் தடுக்க இந்திய அரசு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
குறிப்பாக, நேபாளத்தை ஒட்டியுள்ள உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் எல்லை ஓரப் பகுதிகள் மற்றும் ஆற்றுப் படுகைகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், கரையோர மக்களைப் பாதுகாக்கவும் அந்த மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை முழு உஷார் நிலையில் தயார் படுத்தப்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் அடிக்கடி நிகழும் வெள்ளம், பனிச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, வெறும் நிவாரண பணிகளோடு நிறுத்திவிடாமல், செயற்கைக்கோள் கண்காணிப்பு, பனியாற்று ஏரிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்தல் மற்றும் இந்தியா-நேபாள எல்லை தாண்டிய கூட்டுப் பேரிடர் மேலாண்மை அமைப்புகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
