கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே சைக்கிளில் ஒரு நபர் சென்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக  பேருந்து ஓட்டுனர் சடன் பிரேக் பிடித்தார்.

அதே சமயம் பின்னால் வேகமாக வந்த லாரி கல்லூரி பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கல்லூரி பேருந்து ஓட்டுனர், சைக்கிளில் வந்தவர், மாணவர் என மூன்று பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.