மனித இனத்தின் வருங்காலத்தை பாதுகாக்கவும், மரபணு குறைபாடுகளால் ஏற்படும் பிறவிக் கோளாறுகளைத் தடுப்பதற்காக, கடந்த ஒரு தசாப்தமாகவே பிரிட்டனில் “மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன்” (Mitochondrial Donation) என்ற முன்னேற்ற மருத்துவ தொழில்நுட்பம் சட்டபூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், மூன்று நபர்களின் டிஎன்ஏ மூலம் குழந்தையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பிறந்த 8 குழந்தைகள் சுகமாக வாழ்ந்து வருவதாகவும், இதன் முதலாவது அறிக்கைகள் தற்போது “New England Journal of Medicine” பத்திரிகையில் வெளியாகியுள்ளன.
இந்த தொழில்நுட்பத்தில், இயற்கையாக பெற்றோரிடமிருந்து பெறப்படும் நியூக்ளியர் டிஎன்ஏ-வை பயன்படுத்தி, ஒரு மூன்றாவது பெண்ணிடமிருந்து பெறப்படும் சீரான மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ-வுடன் இணைத்து, சோதனை முறையில் எம்ப்ரியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தாயின் மரபணுவில் உள்ள மரபணு குறைபாடுகள் குழந்தைக்கு பரிமாறப்படுவதைத் தடுக்க முடிகிறது. குறிப்பாக “Leigh Syndrome” போன்ற மரபணு நோய்கள் இந்த மைட்டோகாண்ட்ரியாவின் வாயிலாக பரவக்கூடியவை. இவை குழந்தைக்கு கடுமையான பிறவிக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை. இந்நிலையில், இந்த 8 குழந்தைகளும் தற்போது சீரான உடல்நிலையில் இருப்பது மருத்துவம் மற்றும் உலக ஆராய்ச்சி சமுதாயத்தில் பெரும் எதிரொலியைக் கிளப்பியுள்ளது.
எனினும், இந்த முயற்சி 2015-ஆம் ஆண்டு பிரிட்டனில் சட்டமாக்கப்பட்ட போதிலும், தற்போது வரை இதன் முழுமையான விபரங்கள் ஏன் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை எனும் கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. ஊடகங்களும், ஆய்வாளர்களும் இதன் மேல் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் இருந்து கடுமையான நிதி இந்நோக்கத்திற்கு செலவழிக்கப்பட்டபோதும், இதன் மேற்கொண்ட நுட்ப அறிக்கைகள் உலகிற்கு ஏன் மறைக்கப்பட்டன என்பது முக்கியமான கேள்வியாக தற்போது நீட்டிக்கப்படுகிறது. மேலும் இதற்கு தெளிவான பதில் அளிக்க வேண்டியது தற்போது பிரிட்டன் அரசின் கடமையாகியுள்ளது.
